26 April 2009

வா வா அன்பே....



வா வா அன்பே

உள்ளம் துடிக்குது
உள்ளுக்குள் அழுகுது
வா வா அன்பே
நெஞ்சம் துடிக்குது
நிதமும் துடிக்குது
வா வா அன்பே
கார் மேகம் விலக்கி
வானத்தில் பறப்போம்
காற்றோடு சேர்ந்தே
நிலவுக்குப் போவோம்
நிலவினில் நமக்கோர்
மண்குடிசை அமைப்போம்
வா வா அன்பே
நீயும் நானும் நிதமும்
இரவும் பகலும் சேர்ந்தே
பிரிவை மறப்போம்
துன்பத்தை தொலைப்போம்
வா வா அன்பே
வாலிபம் அழைக்குது
இன்ப வானிலே பறந்திட
இறக்கைகள் அடிக்குது
வா வா அன்பே.

22 April 2009

நல்வாழ்வு மலராதா...?



நல்வாழ்வு மலராதா?

WAR (போர்) அம்மா
இது எங்கும் ஓயாதா - இந்த
பூமி எங்கும்
பூமழை தூவாதா?

வான் நிலா
பூமிக்கு வாராதா - இங்கு
வாழ்க்கை எல்லாம்
நல்லொளி வீசாதா?

தென்றல் காற்று
மெல்ல வீசாதா – மனித
தேகம் எங்கும்
வருடிச் செல்லாதா

துன்பக் காற்று
இங்கு மறையாதா – இங்கு
துன்பம் இன்றி
வாழ்வு மலராதா?

21 April 2009

உனக்காக நான்...



உனக்காக நான்

வண்டு வந்து
தேன் குடிக்க
வண்ண இதழ்
மலர் உண்டு
தென்றல் வந்து
தொட்டு ஆட
அசைந்தாடும்
கொடி உண்டு
நிலவு வந்து
சுற்றி வர
நீல நிற
வானம் உண்டு
முகில் வந்து
முத்தமிட
அழகான
மலை உண்டு
பனி வந்து
படுத்துறங்க
பச்சை நிற
புல் உண்டு
அலை வந்து
தழுவி செல்ல
மணல் மேனி
கரை உண்டு
நீ வந்து
காதல் கொள்ள
உனக்காக
நான் இங்கு
நீ மட்டும்
ஏன் வரவில்லை?

அந்திமாலைப் பொழுது...



அந்திமாலைப் பொழுது

அருக்கன் சிவக்க
அலைகடல் இசைக்க
கொண்டல் அசையும்
கோலம் பார்த்து
தெரியல் வேளை
இரு இதயம் இடம்மாறும்
மோகத்தில் உள்ளம்
முத்தத்தில் தடுமாறும்
நெய்தல் நிலமெங்கும்
தென்றல் மெல்ல வீச
கங்குல் தோன்றும்
ஆழி கொந்தழிக்க
வெண்மதியின் வரவில்
வெண்ணுரை தோன்றும்
இணைந்திருக்கும்
ஈருடல் கண்டு
வானத்து வஞ்சிக்கொடி
நாணத்தில்
உடல் வெளுறிப் போகும்

இதயம் மறந்திடுமா...





இதயம் மறந்திடுமா

நிலவே நிலவே
போய்விடு என்றால்
அது போய்விடுமா
தென்றலே தென்றலே
வீசாதே என்றால்
அது நின்று விடுமா
மலரே மலரே
மலராதே என்றால்
அது மூடிடுமா
பனியே பனியே
சுட்டிடு என்றால்
அது சுட்டிடுமா
காதலே காதலே
போய் விடு என்றால்
அது போய் விடுமா
அன்பே அன்பே
உன்னை மறந்திடு என்றால்
என் இதயம்
உன்னை மறந்திடுமா

தயார்...



தயார்

உன்னை இழக்க
நான் தயாரில்லை
என் அன்பை இழக்க
நீ தயார் என்றால்
என்னை இழக்க
நான் தயார்

20 April 2009

சிறகுகள்...




சிறகுகள்

சிறகுகள் முளைத்தன
பறக்க துடித்தன
முடியவில்லை முடியவில்லை
பூட்டி வைத்த இதயமதை
புரியாமல் திறந்துவிட்டேன்
திறந்து வைத்த இதயமதுள்
அன்பை வைத்து பூட்டிவிட்டேன்
பூட்டி வைத்த இதயமதை
திறந்து விடமுடியவில்லை
ஓரிடத்தில் வைக்கவில்லை
ஈரிடத்தில் வைக்கவில்லை
இதயம் முழுவதிலும் வைத்துவிட்டேன்
முடியாமல் வாடுகின்றேன்
சிறகுகள் அடிக்கின்றன
பறக்கத் துடிக்கின்றன
முடியவில்லை முடியவில்லை

சுவாசிக்கிறேன்...



சுவாசிக்கிறேன்

என் இதய பூவின்
இதழ்கள் ஒவ்வொன்றும்
உனக்காக எழுதப்பட்டவை
உன் நினைவுகளால்
எழுதப்பட்டவை
ஒவ்வொரு பொழுதும்
இதழ் விரித்து உன்னை
(சு)வாசிக்காமல்
நான் உறங்குவதில்லை

காதல் பூ...




காதல் பூ

காதல் பூ
அழகானதும்
வாசமானதுமான
ஒரு வாடாமலர்
இது இதயத்தில்
ஒரு முறைதான் பூக்கும்
வாடிவிட்டால் அல்லது
வாடவிட்டால்
மீண்டும் இதேபோல்
ஒரு மலர்
மலர்வதில்லை

சின்ன சின்ன கீறல்கள்...

சின்ன சின்ன கீறல்கள்

சின்ன சின்ன
கீறல்கள் தான்
இதயத்தில்
வலிக்கின்றது
பெரிய பெரிய
காயங்கள்
ஏதும் இல்லை
வேதனை இல்லை
அப்பப்போ
இதயத்தை வருடும்
நெருடல்கள்
இதமாகத்தான்
எண்ணத்தை
கீறிச் செல்கிறது
கீறல்கள் தான்
வலிக்கின்றது
காயங்கள்
ஏதுமில்லை

புரிந்து கொண்டு
புரியாமல்
உளறும்
உதடுகளும்
தெரிந்து கொண்டும்
தெரியாமல்
பேசும்
வார்த்தைகளும்
உள்ளத்தை
தொட்டு குத்தி
செல்கின்றது
சின்னச் சின்ன
கீறல்கள் தான்
பெரிய பெரிய
காயங்கள்
ஏதுமில்லை
வலிக்கின்றது
இதமாகத்தான்

சொல்லி விட்ட
வார்த்தைக்காகவும்
செய்துவிட்ட
செயலுக்காகவும்
கொடுத்து கொண்ட
தண்டனைகளால்
சின்ன சின்ன
கீறல்கள் தான்
பெரிய பெரிய
காயங்கள்
ஏதுமில்லை
வலிக்கின்றது
இதமாகத்தான்

கண்ணோடு
கனவுகளும்
நெஞ்சோடு
நினைவுகளும்
உறங்கும் போது
விழித்துக் கொள்ளும்
இதயத்தை
நகங்களால்
இதமாக
வருடிவிடும்
சின்ன சின்ன
கீறல்கள் தான்
பெரிய பெரிய
காயங்கள்
ஏதுமில்லை
உண்மையாகத்தான்
வருடல்கள் போல்
நெருடல்களும்
இதமாய்த்தான்
இருக்கின்றது